Wednesday, July 18, 2012

கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் !

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)



கீதை 11 : 1 அர்ச்சுணன் கூறுகிறார் : மிக உயர்ந்ததும் ரகசியமானதும் ஆன்மாவைதேற்றுவதுமான உபதேசங்களை என் மீது தயவுகூர்ந்து அருளினீர்கள் ! அதைக்கேட்டதனால் எனது அஞ்ஞானம் அகன்றது !

கீதை 11 : 2 தாமரைக்கண்ணா ! எல்லா படைப்பினங்களின் உற்பத்தி மற்றும் அழிவு தொடர்பான ஆழமான விவரங்களை அறிந்துகொண்டேன் ! அத்தோடு எல்லையற்ற உமது மஹிமையையும் உணர்ந்துகொண்டேன் !

கீதை 11 : 3 சகலவற்றின் அதிபதியே ! ( பரமேஸ்வரா ) கடவுளின் உன்னதமான வெளிப்பாடே ! ( நாராயணனே ) சகல உருவங்களின் மொத்த சொருபமான புருஸோத்தமரே ! இப்போது உங்களது மனித சொரூபத்தை காண்பதுபோல தங்களது பரமாத்ம சொரூபத்தையும் காண ஆசைப்படுகிறேன் !

கீதை 11 : 4 யோகங்களால் விளையும் அமானுஸ்ய சக்திகளின் அதிபதியே ! ( யோகேஸ்வரா ) என்னால் தாங்கிக்கொள்ளுமளவு எனது சக்திக்குட்பட்ட அளவு உமது பரமாத்ம சொரூபத்தை காட்டும் படி இறைஞ்சுகிறேன் !

கீதை 11 : 5 கடவுளின் உன்னதமான வெளிப்பாடாகிய கிரிஸ்ணர் கூறினார் ! பார்த்தா ! நூற்றுக்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் பற்பலவிதமாகவும் பலரூபமாகவும் பலவர்ணமாகவும் உள்ள பரமாத்ம தெய்வீக சொரூபத்தை உன்னால் முடிந்தளவு பார் !!

கீதை 11 : 6 பரத குலத்தோன்றலே ! பற்பல வெளிப்பாடுகளான ஆதித்யர்கள் , வசுக்கள் , ருத்ரர்கள் , அஸ்விணிகள் ,மருத்துகள்  மற்றும் பல தேவதூதர்கள் இன்னும் யாரும் பார்த்திராத அதிசயமான விவரங்களை இப்போது பார் !

( ஆதித்யர்கள் பண்ணிருவர் ; வசுக்கள் எண்மர் ; ருத்ரர்கள் சிவன் அனுமன் முதலான பதினொருவர் ; ஹயக்கிரீவர்கள் இருவர் அஸ்விணிகள் மற்றும் மருத்துகள் நாற்பத்தொன்பது பேர் என வேதங்களில் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன ! இதில் சிவன் , பிரம்மா கூட தேவதூதர்களாகத்தான் இருப்பதாக காணக்கிடைக்கிறது மனிதனாக இருந்து மரணமில்லா பெருவாழ்வு பெற்றவர்கள் அனைவரும் தேவதூதர்கள் என்ற நிலையையே அடைகிறார்கள் ! இவர்கள் அனைவரும் மனிதர்களைவிட தெய்வீக சக்தி உள்ளவர்களாக இருந்தாலும் இவர்களையும் வழிபடுவது கூடாது ! அது கடவுளை அவமதிப்பதாக ஆகிவிடும் ! ஆனால் இவர்கள் மூலமாக கடவுளை வழிபடுவது ஏற்புடையது !  இவர்களின் குருத்துவம் நம் ஆன்மீக சாதனங்களை வளர்த்து முன்னேற உதவி செய்யும் ! )


கீதை 11 : 7 அர்ச்சுணா ! இப்போது இந்த உடலில் அண்டசராசரங்கள் அனைத்தையும் நீ பார்க்கலாம் ! இயங்குவன இயங்காதவன இதுவரை நீ பார்க்க விரும்பியவைகள் இனிமேலும் நீ பார்க்க விரும்புபவைகள் அனைத்தையும் அந்த பரமாத்ம சொரூபத்தில் உன்னால் காணமுடியும் !

கீதை 11 : 8 ஆனால் அதை உனது ஊணகண்ணால் காணமுடியாது ! ஆகவே தெய்வீக பார்வையை உனக்கு அருளுகிறேன் ! இப்போது எனது மஹிமையை தரிசிப்பாயாக !

கீதை 11 : 9 சஞ்சயன் திருதிராட்டிணனிடம் கூறினான் : இவ்வாறு கூறிவிட்டு சகல யோக சக்திகளின் அதிபதியும் ; சகல பாவத்தையும் தீர்க்கவல்லவரும்  கடவுளின் உன்னதமான வெளிப்பாடுமாகிய கிரிஸ்ணர் தனது பரமாத்ம சொரூபத்தை வெளிப்படுத்தினார் !

கீதை 11 : 10 அனேக முகங்களையும் அனேக கண்களையும் அனேக தெய்வீகத்தோற்றங்களையும் கொண்ட பரமாத்ம சொரூபத்தை அர்ச்சுணன் கண்டான் ! அது திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது ! தெய்வீக ஆயுதங்கள் பலவற்றை ஏந்தியிருந்தது !

கீதை 11 : 11 தெய்வீகமான மாலைகளையும் ; ஆடைகளையும் அணிந்து தெய்வீக வாசணைத்திரவியங்களால் கமழ்ந்து கொண்டிருந்தது ! சர்வ வியாகபத்தோடு எல்லையற்றவராகவும் அளவில்லாத மஹிமையுடனும் எப்புறத்திலும் முகங்களுடன் பரந்து விரிபவராகவும் விஸ்வரூபத்தை அர்ச்சுணன் கண்டான் !

கீதை 11 : 12 ஆயிரக்கணக்கான சூரியர்கள் ஒரே நேரத்தில் உதித்தால் எவ்வளவு பிராகாசம் இருக்குமோ அவ்வளவு அனந்தகோடி பிரகாசம் மின்னியது !

கீதை 11 : 13 தனித்தனியாய் பிரிந்துள்ள ஆயிரகணக்கான பல விதமான தோற்றங்களை அடக்கியதும் பரந்து விரிவதுமான பிரபஞ்சம் முழுவதையும் தேவர்களின் அதிபதியான கிரிஸ்ணரின் சரீரத்தில் ஒரே இடத்தில் அர்ச்சுணன் தரிசித்தான் !

( விஸ்வ ரூபத்தை தரிசிப்பது ஒரு பெரும் பாக்கியமே ! மகாபாரதத்தில் இந்த பாக்கியம் மூன்று நபர்களுக்கு கிடைத்துள்ளது ! அர்ச்சுணன் ,கர்ணன் , பீஸ்மர் ஆகியோருக்கு இந்த பாக்கியம் அருளப்பட்டுள்ளது ! இதற்கு அந்த ஆத்துமாக்களுக்கு அதற்குரிய பக்குவம் , தகுதி இருந்திருக்கிறது என்பதை சாதகர்கள் உணரவேண்டும் !

பக்தியும் மற்றும் ஞானமும் சேர்ந்து முகிழ்க்கும்போது ராஜயோகம் அல்லது ராஜ வித்யை சித்திக்கிறது !

ஆரம்ப கால துவைத பக்திக்கும் அத்வைத ஞானம் முற்றும்போது உண்டாகிற தெளிவால் -- தன்னிலை உணர்ந்து தன்னைஆத்ம சொரூபமாக உணர்ந்த ஒரு ஆத்மாவிற்கு கடவுளின் மீதும் அவரது வெளிப்பாடாகிய நாராயணன் மீதும் நாராயணன் பூமியில் மனிதனாக அவதரித்த அவதாரங்களின் மீதும் உண்டாகிற பக்திக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன ! அதுவே விசிஸ்ட்டாத்வைதம் !

இந்த விசிஸ்ட்டாத்வைத சாதகர்கள் சகலத்தையும் நாராயணனிலிருந்து தோன்றி நாராயணனில் மறையும் நாரயண அம்சங்களாகவே புரிந்துகொள்ளவேண்டும் என்பதையே கீதையின் 9 & 10 அத்தியாயங்களின் ரகசியம் !

ஆழ்ந்த ஞானத்தில் உண்டாகிற பக்தி அறிதல் , தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றை கடந்து உணர்ந்து கலந்திருத்தல் என்பதாகவே ஆகிவிடும் ! அந்த உணர்வை எட்டிய சாதகன் நான் நீ என்ற பேதத்தையும் உணர்வளவில் கடந்துவிடுவான் ! மற்ற மனிதர்கள் யாரையும் நாராயணின் ஒரு வெளிப்பாடாக தானும் பிறருமே ஒரு தற்காலிக வெளிப்படாகவே உணருவான் ! இருக்கிறோம் என்ற இருப்பைத்தவிற வேறெதுவும் இல்லாத ஒரு நிலை அடையும் ! அங்கு சுயமோ பிறரைப்பற்றிய பயமோ அற்றுப்போய் விடும் !

உண்மையில் அந்த நிலையை ஒரு சாதகன் அடைவதே `` விஸ்வரூப தரிசனம் `` காண்பது ! கண்ணால் காண்பது அல்ல உள்ளதால் உணர்ந்து தெளிந்து உள்ளே விழைந்த ஞானத்தால் மட்டுமே அடையக்கூடிய தரிசனம் ! அந்தத்தரிசனமே ஒரு யோகம் ! )


கீதை 11 : 14 விதிர்விதிர்த்து நிலைதடுமாறி மயிர்க்கால்கள் கூச்செரிந்தும் வியப்புமேலிட்டவனாய் அர்ச்சுணன் இரு கைகளையும் கூப்பியவனாக தலைசாய்த்து வணங்கி கடவுளின் உன்னதமான வெளிப்பாடாகிய கிரிஸ்ணரை துதிக்கதொடங்கினான் !

கீதை 11 : 15 எனதருமை கிரிஸ்ணா ! சற்குருவே ! அனைத்து தேவதூதர்களையும் அனைத்து படைப்பினங்களையும் ஒன்று சேர உம் சரீரத்தில் காண்கிறேன் ! படைப்பு தொழிலுக்கு நியமிக்கபட்ட பிரம்மாவை தாமரையில் அமர்ந்திருப்பவராகவும் ; அதுபோல ருத்திரர் சிவனையும் ; இன்னும் மகா முணிவர்களையும்  சாதுக்களையும் அசுரர்களையும் தெய்வீக சர்ப்பங்களையும் காண்கிறேன் !

கீதை 11 : 16 அண்டபகிரண்டங்களின் தலைவனே ! உமது பரமாத்ம சொரூபத்தில் பலபல கைகளையும் தோள்களையும் வாய்களையும் கண்களையும் எல்லையே இல்லாமல் பரந்து பரந்து எங்கெங்கும் விரிந்துகொண்டே இருப்பதாக காண்கிறேன் ! உம்மிடத்தில் முடிவையோ நடுவையோ துவக்கத்தையோ என்னால் காண முடியவில்லை !

கீதை 11 : 17 இந்த பரமாத்ம சொரூபம் அதன் ஒளிவெள்ள பிரகாசத்தால் காண்பதற்கு கடிணமானதாக இருக்கிறது !வெடித்து சிதறுகிற தீப்பிழம்புகளால் எண்திசையிலும் பரவி நிறைவதாகவும் அளவிடமுடியாத சூரியக்கதிர்வீச்சு போலவும் நான் காண்கிறேன் அத்தோடு பலவகையான மகுடங்களையும் ஆரங்களையும் பதக்கங்களையும் அணிந்துள்ளதாகம் மகிமையைக்காண்கிறேன் !

கீதை 11 : 18 நீரே உன்னதமும் மூலப்பொருளுமாகிய பிரதான பெளதீகம் ! இந்தப்பேரண்டம் முழுமையும் முடிவாக மறையும் இடம் நீரே ! நீரே ஆதியானவர் ! நீரே அழிவில்லாதவர் ! நீரே தெய்வீக சம்பத்துகள் பெளதீக சம்பத்துகள் யாவற்றையும் நிர்வகிக்கிறவர் ! நீரே கடவுளின் அதி உயர்ந்த வெளிப்பாடாகவும் இருக்கிறவர் !

கீதை 11 : 19 ஆதியும் அந்தமும் நடுவும் இல்லாதவர் நீரே ! உமது மகிமை எல்லையற்றதாக விரிந்துகொண்டே இருப்பது ! எண்ணிறந்த கைகளையும் சந்திர சூரிய நட்சத்திரங்களை ஒத்த கண்களையும் உடையவர் நீரே ! உமது வாயிலிருந்து ஜுவாலிக்கிற அக்கிணி புறப்படுவதையும் உமது கதிர்வீச்சுக்களால் பேரண்டம் முழுவதும் தகித்து எரிவதாகவும் காண்கிறேன் !

கீதை 11 : 20 நீர் ஒருவரே வானங்கள் நட்சத்திர மண்டலங்கள் அனைத்திலும் அவற்றுக்கு ஊடாகவும் விரவியிருப்பவராக காண்கிறேன் ! உன்னதமானவரே ! ஆச்சரயமான படுபயங்கரமுமான இந்த பரமாத்ம சொரூபத்தை காணும்போது எல்லா நட்சத்திர மண்டலங்களும் தூசியைப்போல ஆகிவிட்டன !

கீதை 11 : 21 வானமண்டல சேனைகளான தேவதூதூதர்களின் திரள்கூட்டமும் உம்மிடம் சரணடைகின்றன ! அவைகளில் சிலவோ ( அசுரர்கள் ) சுயமகிமை தேடியதற்காக அச்சமடைந்தனவாக கைகளை கூப்பி தொழுது உம்மிடம் மன்றாடி தொழுகின்றன ! உம்மைத்துதித்து உம்மிலே ஐக்கியமடைகின்றன !

கீதை 11 : 22 சிவன் முதலான ருத்ரர்கள் பதினொருவர் ,பண்ணிரெண்டு ஆதித்யர்கள் ,எட்டு வசுக்கள் , சாத்யர்கள் , விஸ்வகர்மாக்கள் , அசுவினிகள் இருவர் , நாற்பத்தொன்பது மருத்துகள் , மரணமில்லா பெருவாழ்வு பெற்ற மனிதர்களின் கூட்டங்களும் ,கந்தர்வகள் யஷர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய அனைத்து தேவதூதர்களின் கூட்டங்களும் பிரமிப்படைந்து உம்மையே கண்டு துதிக்கிறார்கள் !

கீதை 11 : 23 நீண்ட புஜங்களை உடையவரே ! பலமுகங்களும் கண்களும் பல கைகள் தொடைகள் திருவடிகளும் பல வயிறுகளும் பல வாய்களும் அதில் பயங்கரமான கோரைப்பற்களும் உடையதான உமது பரமாத்ம சொரூபத்தை கண்டு எல்லா மண்டலங்களும் நடுநடுங்குகின்றன ! நானும் அவ்வாறே நடுங்குகிறேன் !

கீதை 11 : 24 பரந்து விரியும் விஸ்ணுவே ! பல வண்ண கதிர்களை உமிழும் வானளாவிய உம்மையும் சகலத்தையும் விழுங்கும் உமது வாயையும் ஒளிமிகுந்த கண்களையும் கண்டு பயத்தினால் நடுங்கி என் மனம் தைரியத்தையும் சமநிலையையும் இழந்துவிட்டது !

கீதை 11 : 25 ஜகத் குருவே ! அகில உலகங்களின் ரட்சகரே ! கோரைப்பற்களையும் ஊழிகாலத்து நெருப்பு போல ஜுவாலிக்கும் திருமுகங்களையும் கண்டு தடுமாற்றம் அடைகிறேன் ! நிம்மதி இழந்துவிட்டேன் ; ரட்சித்து அருள்புரிய வேண்டும் !!

கீதை 11 : 26 திருதுராஸ்ட்ரர்கள் அனைவரும் அவர்களின் துனைவர்களான அரசர்கள் அனைவருடனும் ஏன் பீஸ்மருடனும் துரோனருடனும் கர்ணனுடனும் மற்றும் நமது தரப்பு சேனைகளின் தலைவர்களும் கூட உமது படுபயங்கரமான வாய்க்குள் வேகமாக உள்ளிழுக்கப்படுகிறார்கள் !

கீதை 11 : 27 அவர்களில் சிலர் பல்லிடிக்கில் சிக்கி தலைநொருங்கியும்  சின்னாபின்னமாக்கப்பட்டு கிடக்கின்றனர் !

கீதை 11 : 28 பற்பல வேகமான நீரோட்டங்களும் ஆறுகளும் எவ்வாறு விரைந்தோடி கடலில் புகுந்து மறைகின்றனவோ அவ்வறே இம்மண்ணுலக வீரர்கள் அனைவரும் விரைந்தோடி உமது வாயில் புகுகின்றனர் ! உமது வாயினின்று ஜுவாலிக்கும் திக்கொழுந்துகளில் கலந்து மறைகிறார்கள் !

கீதை 11 : 29 விட்டில்பூச்சிகள் விளக்கில் தாமாகவே விழுந்து அழிவதைப்போல சகல மனுக்குலமும் நாலாபுறமுமிருந்து வெகுவேகமாக உமது வாயில் விழுந்து அழிகிறார்கள் !  

கீதை 11 : 30  அனைத்து உலகங்களையும் ஜுவாலிக்கிற உமது வாயால் விழுங்கிக்கொண்டும் நாலாபுறமும் நாக்குகளால் துழாவுகிறீர்கள் ! விஸ்ணுவே ! படுபயங்கரமான உமது காந்தியால் அனைத்தையும் தகிக்கிறீர்கள் !

கீதை 11 : 31  தேவதூதர்களிலும் உன்னதமானவரே ! உம்மைத்துதிக்கிறேன் ! பயங்கர வடிவுள்ள நீங்கள் யார் ? ஆதிபுருஷனே உம்மை புரிந்து கொள்ள விளைகிறேன் எனக்கு வெளிப்படுத்துவீராக ! இன்னும் உம்மை - உமது வெளிப்பாடுகளை முற்றுணராதவனாகவே இருக்கிறேன் ! அருள்புரிவீராக !!

கீதை 11 : 32 யுகபுருஷரான கிரிஸ்ணர் கூறினார் : யுகங்கள் தோறும் சிருஸ்ட்டிகளை அழிப்பவனாகிய நியாயதிபதி நானே ! இப்போதும் அனைவரையும் அழிப்பதில் ஈடுபட்டுள்ளேன் ; உங்களைத்தவிற இருதரப்பிலும் எல்லாவீர்ரகளும் அழிக்கபடுவார்கள் !

கீதை 11 : 33 எனவே எழுந்து போரிடுவாயாக ! எதிரிகளை வென்று வளமான அரசினை அனுபவிப்பாயாக ! ஏனெனில் இவர்கள் அனைவரும் கொல்லப்பட ஏற்கனவே நிச்சயக்கபட்டுவிட்டனர் ; திறமையான போராளியே அதன் கருவியாக மட்டுமே ஆவாயாக !!

கீதை 11 : 34 துரோணர் , பீஸ்மர் , ஜயத்ரன் . கர்ணன் மற்றும் இதர மாவீர்ர்கள் அனைவரும் ஏற்கனவே என்னால் அழிவுக்கு நியமிக்கப்பட்டுவிட்டனர் ; அழிப்பது நீயல்ல ; நீ வெறுமனே கருவி மட்டுமே ! குழப்பமடையாமல் போரிடுவாயாக ! வெற்றி பெறுவாய் !

கீதை 11 : 35 இதைக்கேட்டுணர்ந்த அர்ச்சுணன் கூப்பிய கரங்களுடன்  நடுங்கியபடி மீண்டும்மீண்டும் கிரிஸ்ணரை வணங்கினான் ! பயத்துடனும் தழுதழுத்த குரலில் கூறலானான் :

கீதை 11 : 36 சகல புலண்களையும் சரியாக அடக்கியாள்பவரே ! உம்மை அறிந்துணர்ந்த சித்த புருஷர்கள் ( புலண்களை அடக்கியாளத்தெரிந்தால் மட்டும் போதாது யார் நாராயணனை தமது சித்தத்தால் அறிந்து உணர்ந்தவர்களோ அவர்களே சித்தர்கள் ) உமது பெருமைகளால் மகிழ்கின்றனர் ! முழு உலகமும் உம் மீது பற்றுதல் கொண்டு உம்மை வந்தனை செய்கின்றனர் ; ஆனால் அசுரர்களோ பயத்தினால் உம்மிடமிருந்து சிதறி ஓடுகின்றனர் !

கீதை 11 : 37 மஹாத்மாவே ! பிரம்மாவாலும் வணக்கத்திற்குரிய தகுதியுள்ளவர் நீரே ! ஏனெனில் தாங்களே ஆதி படைப்பாளர் ! எல்லையற்றவரே ! தேவர்களின் தேவனே ! அகிலத்தின் அடைகலம் நீரே ; ஏனெனில் அழிவற்றவர் நீரே ! ஜடத்தோற்றங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட பரமானவர் நீரே ! காரணங்கள் அனைத்திற்கும் காரணமும் நீரே !

கீதை 11 : 38 நீரே ஆதிதேவர் ! ஆதிபுருஷர் ! பழமையானவரும் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்தின் இறுதி அடைக்கலமுமானவரும் நீரே ! அனைத்தையும் அறிந்தவரும் அனைவராலும் அறியப்படவேண்டிய இலக்கும் நீரே ! பரமான புகலிடமும் நீரே ! எல்லையற்ற ரூபமானவரும் பிரபஞ்ச தோற்றம் முழுவதிலும் பரவியுள்ளவரும் நீரே !

கீதை 11 : 39  நீரே வாயு ! நீரே எமன் ! நீரே அக்னி ! நீரே வருணன் ! நீரே சந்திரன் ! நீரே மனுக்குலத்தின் உடையவர் ! ஆதிமூலத்தின் குமாரனும் நீரே ! எனது மரியாதை கலந்த வணக்கங்களை ஆயிரமாயிரம் முறைகள் சமர்பிக்கிறேன் !!

கீதை 11 : 40 முன்னிருந்தும் பின்னிருந்தும் எல்லாத்திக்குகளிலிருந்தும் உம்மை வணங்குகிறேன் ! எல்லையற்ற சக்தியும் எல்லையற்ற ஆற்றலும் நீரே ! நீரே எங்கும் பரவி நிறைகின்றீர் !!

கீதை 11 : 41 உம்மை நண்பன் என எண்ணிக்கொண்டு கிரிஸ்ணா  யாதவா நண்பனே என்றெல்லாம் அகந்தையுடன் அழைத்துள்ளேன் ! உம்மை ஆழமாக உணராமல் பித்தத்தினாலும் பிரேமையினாலும் புத்திக்குறைவாலும் நான் செய்தவை அனைத்தையும் பொருத்தருள்வீராக !

கீதை 11 : 42 பொழுதுபோக்கின்போதும் ; உணவருந்தும்போதும் ; ஒரே படுக்கையில் படுத்திருந்தபோதும் நண்பர்களுக்கு மத்தியிலும் தனியாகவும் கூட கிண்டலும் கேலியும் செய்துள்ளேன் ! இழிவுகளை கடந்தவரே ! இத்த்கைய குற்றங்களையும் மன்னிப்பீராக !!

கீதை 11 : 43 அகிலத்தில் அசைகின்ற அசையாத அனைத்திற்கும் தந்தை நீரே ! வழிபாட்டிற்குரிய சற்குருவும் நீரே ! உமக்கு சமமாகவே ஒன்றாகவோ புகழத்தக்கவர் யாரும் இல்லை ! அளவற்ற வல்லமை உள்ளவரே ! மூவுலகங்களிலும் உம்மை விட உயர்ந்தவர் யார் உளர் ?

கீதை 11 : 44 எனவே நான் மரியாதைக்குரிய வணக்கங்களை கீழே விழுந்து சமர்பிக்கிறேன் ! எவ்வாறு தந்தை தனது மகனது குற்றங்களையும்  ; நண்பன் நண்பனது குற்றங்களையும் ; கணவன் மனைவியின் குற்றனகளையும் பொறுத்துக்கொள்கிறார்களோ அவ்வாறே எனது தவறுகள் யாவையும் பொறுத்தருள்வீராக ! உமது கருணையை வேண்டுகிறேன் !!

கீதை 11 : 45 இதுவரை நான் என்றுமே கண்டிராத உமது விஸ்வருபத்தரிசணத்தை கண்டதால் மிகவும் மகிழ்கிறேன் ! ஆனாலும் பயத்தால் குழம்புகிறேன் ! தேவர்களின் தலைவனே ! அகிலத்தின் அடைகலமே ! கருணைகாட்டி தங்களது தெய்வீக ரூபத்தையும் காட்டியருள்வீராக !!

கீதை 11 : 46 விஸ்வரூபமே ! ஆயிரம் கரங்களையுடையவரே ! மகுடத்துடனும் சங்கு சக்கரம் கதை மற்றும் தாமரை மலருடனும் நான்கு கரத்துடன் விளங்கும் அழகிய ரூபத்தையும் காண விரும்புகிறேன் !!

கீதை 11 : 47 யுகபுருஷன் கிரிஸ்ணர் கூறினார் : எனதன்பு அர்ச்சுணா ! எனது ஆத்ம சக்தியால் இந்த தெய்வீக விஸ்வரூபத்தை உனக்கும் மகிழ்வுடன் காண்பித்தேன் ! எல்லையற்றதும் பிரகாசம் மிக்கதுமான முழு ரூபத்தை உலகத்தில் உன்னைத்தவிர யாரும் கண்டதில்லை !!

கீதை 11 : 48 குரு வம்சத்தில் சிறந்தவனே ! யாகங்களை செய்வதாலோ ; வேதங்களை கற்பதாலோ ; தானங்களாலோ ; புண்ணிய செயல்களாலோ அல்லது கடும் தவங்களாலுமோ இந்த ரூபத்தை ஜடவுலகில் காண்பதற்கு இயலாது ! உன்னைப்போல தெய்வீகப்பார்வை அருளப்பெறாத மற்றவர்களால் காண்பதற்கு இயலாது !!

கீதை 11 : 49 எனது பயங்கரமான உருவத்தை கண்டு மிகவும் பாதிக்கப்பட்டு குழம்பியுள்ளாய் ! இனி இது முடிவு பெறட்டும் ! எல்லாக்குழப்பங்களிலிருந்தும் விடுபடுவாயாக ! நீ விரும்பும் அழகிய ரூபத்தையும் மீண்டும் அமைதியான ரூபத்தையும் காண்பாயாக !!

கீதை 11 : 50 சஞ்சயன் கூறினான் : இவ்விதமாக அர்ச்சுணனிடம் பேசியபடி கிரிஸ்ணர் நான்கு கரங்களையுடைய அழகிய நாராயண ரூபத்தையும் காட்டி ( செளமிய நாராயணன் ) மீண்டும் மனித ரூபத்தையும் காட்டி அச்சம் நீக்கி உற்சாகப்படுத்தினார் !!

கீதை 11 : 52 யுகபுருஷன் கூறினார் : காண்பதற்கு அரியதான இந்த விஸ்வருபத்தை நீ கண்டதுபோல தேவதூதர்களும் தரிசித்ததில்லை ! அந்த ரூபத்தை தரிசிக்க நித்தமும் அவர்கள் நாடுகின்றனர் !

கீதை 11 : 53 வேதங்களை கற்பதாலோ ; தானங்களாலோ ; கடும் தவங்களாலுமோ இந்த ரூபத்தை காண்பதற்கு இயலாது ! நேர் வழியில் என்னை பின்பற்றுவதால் ஞானதிருஸ்ட்டியடைந்து உன்னைப்போல காணமுடியும் !!

கீதை 11 : 54 பக்தி கலக்காத நவீன நாத்திக ஞானத்தினால் என்னைப்பற்றிய உண்மைகளின் ரகசியங்களில் நுழையமுடியாது ! எதிரிகளை வெல்லும் அர்ச்சுணா ! ஞானபக்தியால் மட்டுமே இது சாத்தியமாகும் !!

கீதை 11 : 55 பாண்டுவின் மைந்தனே ! என்னை பரமாத்மாவாக உணர்ந்து என் மூலம் கடவுள் மீது பக்திபிரேமையுற்று ; பலன் விளைவில் பற்றிலாமல் எங்களுக்கு அர்ப்பனமாக சகல கர்மங்களையும் செய்து மன களங்களிலிருந்து விடுபடவும் எங்களை அடையவும் இலக்கை வைத்து சகல உயிர்களிடத்தும் பகையற்ற நேயத்தை அடைபவனே எங்களை வந்தடைவான் !!