Tuesday, July 17, 2012

கீதை 14 : குணத்ரய விபாக யோகம்


கீதை 14 : 1 யுகபுருஷன் கிரிஸ்னர் கூறினார் : எதை அறிந்ததால் முனிவர்கள் இவ்வுலகிலிருந்து விடுபட்டு பரலோகத்தை அடையும் பரிபூரணத்தை (சித்தியை) அடைந்தார்களோ அந்த ஞானத்தை – ஞானங்களில் எல்லாம் உயர்ந்ததான அந்த மெய் ஞானத்தை இப்போது மீண்டும் உனக்கு அறிவிக்கிறேன் .

…………………………………………………………………

எது சித்தி ?
பரிபூரணம் என்ற அர்த்தத்தில் ஸ்ரீகிரிஷ்ணர் சித்தி என்ற பதத்தை - வார்த்தையை இங்கு பயன்படுத்தியுள்ளார் . ஆன்மீக வட்டாரங்களில் முக்தி அடைந்தார் என்ற வார்த்தையை ஒரு உண்ணதமான இலக்காக – அல்லது முடிவு போல பிரயோகப்படுத்தி வருகிறோம் . ஆனால் முக்தி என்பது ஒரு பக்குவம் மட்டுமே . அதுவே முடிவல்ல . பிறவிகள் தோறும் ஒவ்வொரு ஆத்மாவும் ஏதேனும் ஒரு பக்குவத்தை – முக்தியை அடைந்து கொண்டுதான் உள்ளது . சிறப்புள்ள ஒவ்வொரு பக்குவம் அடைந்தவர்களும் சாதாரண மனிதர்களுக்கு பெரியவர்களாக – சித்தி அடைந்தவர்களாகத்தான் – சித்தர்களாகத்தான் தெரிவார்கள் . ஆனால் அதுவே முடிவல்ல – ஸர்வே பராம் ஸித்திம் – என்ற வார்த்தையை கிரிஷ்ணர் பயன்படுத்துகிறார்  பரத்தை அடைவதற்கான சகலவிதமான முக்திகளையும் ஒருவர் பெற்று பரிபூரணம் அடைவதே சித்தி என்கிறார் . முக்திகளில் திருப்தியடையாத தாகம் இருந்தால் மட்டுமே இவ்வுலகிலிருந்து விடுபட்டு பரலோகத்தை அடைய முடியும் . சித்தி அடையமுடியும்

கீதை 14 : 2 இந்த ஞானம் ஊட்டுவிக்கப்பட்டு அதில் நிலைபெற்றவர்கள் என்னைப்போலவே இயல்படைகின்றனர் . அவர்கள் பிரளயங்களில் சிக்குண்டு தொல்லையுருவதுமில்லை ; யுகங்கள் தோறும் பிறப்புகளிலும் அல்லலுருவதில்லை . (பிறப்பு இறப்புகளை கடந்து விடுகின்றனர்)

பிறப்பு இறப்பை கடந்தவர்கள் – நித்திய ஜீவனுள்ளவர்கள் –மரணமில்லா பெருவாழ்வு பெற்றவர்கள் என்ற வரையறையே ஒவ்வொரு ஆத்மாவும் அடையவேண்டிய இலக்காகும் . அந்த தகுதி அடைந்தால் மட்டுமே ஜீவாத்மா பரமாத்மாவைப்போலவே இயல்புள்ளதாக மாறுகிறது . அதுவரை ஆத்மாக்கள் பூமியில் நடக்கும் யுகங்களில் பிறந்துகொண்டும் இறந்துகொண்டும் இறுதியில் பிரளயத்திலும் அல்லலுற்றே ஆகவேண்டும் .

இறப்பு அதற்கான நோய்நொடி போன்ற துன்பங்களே மனிதனை வாட்டுகிறது என்றால் பிரளயங்களில் உண்டாகும் துன்பங்கள் வர்ணிக்க கூடியதல்ல . ஒரு சுனாமிக்கே நாம் இன்னும் ஒப்பாறி வைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் வரப்போகிற பிரளயம் வர்ணிக்க முடியாதது . பூமியில் இதுவரை மூன்று யுகங்கள் கடந்து விட்டன. ஒவொரு யுக முடிவிலும் பிரளயம் நடந்திருக்கிறது . அந்த பிரளயங்கள் பற்றி இந்திய வேதங்களில் பல குறிப்புகள் உள்ளன . அந்த பிரளயத்தில் யார் மூலமாக உயிர்கள் காக்கப்பட்டதோ அந்த மணுவை முன்னிலைப்படுத்தி கும்பமேளாக்களும் நடக்கின்றன .

இப்போது நடக்கும் கலியுகத்தின் முடிவில் கல்கி வருமுன்னர் உண்டாகும் பிரளயம் பற்றியும் குறிப்புகள் உள்ளன . யுக புருஷன் இயேசுவும் இதைப்பற்றி விரிவாக கூறியுள்ளார் :

மத்தேயு 24
6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.

7.
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

8.
இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

12.
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.

21. ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.

22.
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.

29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

30.
அப்பொழுது, மனுஷகுமாரனுடைய (கல்கி – மனுஷகுமாரன் என்பதும் சிவக்குமார் என்பதும் ஒரே அர்த்தமே – நாராயணன் ஆத்மா என்றாலும் பூமியில் அவதாரமாக சரீரத்தில் வரும் பொழுது அவர் மனுஷகுமாரன் – அதாவது ராமர் ; கிரிஷ்ணர் ; இயேசு வாக அவர் வந்தபோது அவர் சிவக்குமார் – முருகன் ) அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

31.
வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.


மரணமில்லா பெருவாழ்வு பெ பக்குவமடைந்த ஆத்மாக்கள் பூமியிலிருந்து விடுபட்டு பரலோகத்தை அடைந்து விடுவார்கள் ; ஆனால் மற்றவர்கள் ஊழியை சந்தித்தே ஆகவேண்டும் . ஆனால் ஆறுதல் என்னவென்றால் சாதாரண மனிதர்களும் சற்குருநாதர்கள் – நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளை பக்தி செய்து ; வேண்டுதல் செய்துகொண்டே அன்றாட வாழ்வை வாழ்ந்தால் அவர்களும் பிரளயத்தில் அதிக துன்பம் இல்லாமல் காக்கப்படுவார்கள்

மனிதர்களுக்கு தகுதி இல்லாமல் போனாலும் நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளை நாடுவது – கடவுளுக்கு பயந்து வாழ்வது – பக்தி செய்வது என்பது அவர்களின் குருகுலம் என்ற பாதுகாப்பை நமக்கு கொடுத்துவிடுகிறது . தொடர்ந்து பக்குவத்தை நம்மில் வளர்த்தெடுத்து நம்மை நித்திய ஜீவனுக்கும் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறது .

பரமாத்மா எப்படி நித்திய ஜீவன் உள்ளவரோ அதைப்போல முதன்முதலில் ஜீவாத்மாக இருந்து பரமாத்மாவைப்போலவே  இயல்படைந்து முழுமையடைந்து பரலோகத்தில் பிரவேசித்த சிவனும் நித்திய ஜீவன் உள்ளவர் .

இந்த இருவரையே நர நாராயணர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது . கடவுளுக்கு அடுத்த நிலையிலுள்ள அதி தூதர்கள் காப்ரியல் மற்றும் மைகேல் என்று நாராயணனும் சிவனுமே ஆப்ரகாமிய வேதங்களில் குறிக்கப்பட்டுள்ளனர் .

இந்த இருவர் நாமத்தினால் மட்டுமே கடவுளை நம்மால் நெருங்கமுடியும் . இந்த நாமங்களே நம்மை நமது பாவங்களின் தண்டனைகள் மற்றும் பிறப்பு இறப்பு அல்லல்களிளிருந்து காத்து இறைவனின் கிருபையை நமக்கு பெற்றுத்தரும் .

இதம் க்ஞானம் உபாஷ்ரித்ய என்ற பதம் இந்த ஞானம் ஊட்டுவிக்கப்படுவதால் பாதுக்காக்கபடுபவர்கள் என்ற அர்த்தத்தில் யுகபுருஷனால் உச்சரிக்கப்படுகிறது .

  …………………………………………………………………

கீதை 14 : 3 பரதனின் மகனே ! மொத்த ஜட இயற்கையின் இருப்பிடம் நானே . எனது கருவறையிலிருந்தே பிரம்மன் சகல உயிரிணங்களையும் எடுத்து படைக்கிறான் .அவை கர்ப்பமடைவது என்னாலே சாத்தியமாகின்றது .

கீதை 14 : 4 குந்தியின் மகனே ! பிரம்மம் மற்றும் ஜட இயற்கையின் (பிரக்ருதி) கருவறையிலிருந்து சகல உயிரினங்களின் கர்ப்பத்திலும் உருவங்கள் (சரீரம்) தோன்ற விதை அளிக்கும் தந்தை நானே .

கீதை 14 : 5 பிரக்ருதி – ஜட இயற்கை ; சத்வம் ; ரஜஸ் மற்றும் தமோ குணங்களால் உண்டாக்கப்பட்டது . நித்தியமான ஆத்மா இந்த உடலில் சஞ்சரிக்கும் போது இக்குணங்களினால் மயக்கப்பட்டு பந்தப்படுகின்றது.

சத்வ குணமும் பந்தத்தை உண்டாக்குவதே !

கீதை 14 : 6 அவற்றில் சத்வ குணம் ஜட இயற்கைகளில் முடிந்தளவு பாவமில்லாத இன்பத்தையும் ; ஞானத்தையும் அளித்து ஒருவனை பிரகாசப்படுத்துகிறது . பாவமேயற்றவனானாலும் அவனும் ஞானத்தாலும் இன்பத்தாலும் பந்தப்பட்டே நிற்கிறான் .

..........................................................................................................

யுகபுருஷன் இங்கு ஒரு முக்கியமான விசயத்தில் அழுத்தம் கொடுக்கிறார் . அது மேன்மையான சத்வகுணமும் கடரப்படவேண்டிய ஒன்று என்பதே . மனிதனுக்குள் மாறிமாறி எழும்பும் முக்குணங்களில் தாழ்மையான மற்ற குணங்களை ஒழிக்க சத்வத்தில் வளரவேண்டியது அவசியம் - மிகமிக அவசியம் . ஆனால் வளர்ந்தபிறகோ அதுவும் துறக்கப்படவேண்டிய ஒன்றே . நிர்க்குணம் – குணங்களை கடந்த ஒருநிலை – அல்லது கடவுளிடம் ஒரு கருவி என்பதற்கு மேலாக எந்த ஒரு சிறு விசயமும் நித்திய ஜீவன் அடைந்தவர்களிடம் இருக்காது . பரமாத்மா எவ்வாறு எவைகளாலும் பாதிக்கப்படாதவரோ – நிர்க்குணம் உள்ளவரோ அவ்வாறே நித்திய ஜீவனடைந்த ஜீவாத்மாவும் இருக்கும் . இவ்வாறு அடங்கிய – தனக்குள்ளாகவே ஒடுங்கிய நிலையே லிங்கமாக சித்தரிக்கப்படுகிறது . சிவன் ஆத்மாவில் ஒடுங்கிய நிலையே சிவலிங்கம் . அதாவது ஆத்மசொரூபி .

ஆகையால்தான் தாழ்மையான மற்ற குணங்களின் இழிவுகளைப்பற்றி பேசுவதைவிட இங்கு சத்வகுணமும் ஒரு பந்தம் என்கிறார் .ஏனென்றால் கீதையின் உபதேசங்களை ஆராயும் தன்மை கொஞ்சமேனும் பக்குவம் – சத்வத்தில் நிலைக்காத ஆத்மாக்களுக்கு வராது . ஒளிசரீரம் - மரணமில்லாபெருவாழ்வு நெருங்கும் போது சத்வம் ; அந்த குணங்களினால் பூமியில் உண்டாகும் கீர்த்தி – புகழ் – சீடர்கள் கூட்டம் இவைகளை கடந்தாகவேண்டும் .

இந்தப்பிறவியின் மிக துவக்கத்திலிருந்தே கடவுள் புண்ணியம் ; புகழ் நாட்டம் ஆகியவைகளில் நான் அடிமேல் அடிவாங்கி கற்றுக்கொள்ளும்படியாகவே நடத்திக்கொண்டிருந்தார் . தர்மம் ;சமூகநீதி ; பொதுசேவை ; தியாகம் என்ற வார்த்தைகளும் புகழ்நாட்டம் என்ற தவறான இயல்பின் மீது புணுகு போட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்து கடவுளுக்கு கீழ்படிய – சரணாகதியை கற்றுக்கொள்ள துவங்கியபோதுதான் ` எல்லா புகழும் இறைவனுக்கே ` என்ற வாசகம் எனக்கு புரிய ஆரம்பித்தது .

அது சென்ற பிறவியின் தொடர்பில் – இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற நபர் என எனக்கு உணர்த்தப்பட்டாலும் அதனால் எனக்கு எந்த மேண்மையும் இல்லை என்பதோடு நான் கற்றுக்கொள்ள வேண்டியதே இன்னும் இருக்கிறது . சமீபத்தில் அப்பிறவியிலும் கீதையின் பத்து அதிகாரங்கள் மட்டுமே ஒரு கர்மயோகிக்கு உரிய பாணியில் விளக்க உரை எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தேன் . அப்போதுதான் எந்த முன் திட்டமும் இல்லாமல் இப்பிறவியிலும் அதன் தொடர்பாகவே கீதை மொழிபெயர்ப்பு பணிக்குள் வந்திருக்கிறேன் . என்றாலும் இவையெல்லாம் நான் தெளிவு பெற்றுக்கொள்ள மாத்திரமேயன்றி இதனை யார் பயன்படுத்திக்கொள்வார்கள் – யார் யாருக்கெல்லாம் பயனளிக்கும் என்பதைப்பற்றி நான் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லாமல் கடவுளிடம் ஒப்படைத்து விடுகிறேன் .

...........................................................................................................  
கீதை 14 : 7 குந்தியின் மகனே ! எல்லையற்ற ஆசை ; மற்றும் சாதுர்யம் தொடர்பால் ரஜோகுணம் உண்டாகிறது . அது உடலில் உறையும் ஆத்மாவுக்கு பலன் விளைவில் பற்றை கொடுப்பதால் பந்தப்படுகிறான் .

கீதை 14 : 8 பரதனின் மகனே ! அறியாமையால் பிறக்கும் தமோ குணமோ உடலில் உறையும் ஆத்மாவை சகலத்திலும் மயக்குகிறது . தாபம் ; சோம்பல் ; உறக்கம் ஆகியவற்றால் பந்தப்படுத்துகிறது .

கீதை 14 : 9 தமோ குணமோ தாபத்தால் பந்தப்படுத்துகிறது .ரஜோ குணமோ செயல்களின் பலன் விளைவுகளால் பந்தப்படுத்துகிறது . அதுபோல சத்வ குணமும் ஞானத்தை விருத்தியாக்குவதிலும் பேரின்பத்திலும் பந்தப்படுத்துகிறது .

கீதை 14 : 1 சிலசமயங்களில் சத்வகுணம் மேலோங்கி ரஜோகுணத்தையும் தமோகுணத்தையும் அடக்குகிறது . சிலசமயங்களில் ரஜோகுணம் மேலோங்குகிறது . சிலசமயங்களில் தமோகுணம் மேலோங்குகிறது .இவ்வாறு ஆத்மாவில் குணங்கள் மாறிமாறி மேலோங்கி மற்ற குணங்களை அடக்குகிறது .

கீதை 14 : 11 எப்போது ஞானம் விருத்தியாகின்றதோ அப்போது இந்த உடலின் எல்லா கதவுகளும் பிரகாசம் அதிகரிப்பதை அறியமுடியும் சத்வகுணம் இவ்வாறுதான் ஆளுமையடையும் .

.......................................................................................................

மனித சரீரத்திற்கு ஒன்பது கதவுகள் உள்ளன .(இரு கண்கள் ; இரு காதுகள் ; இரு நாசித்துவாரங்கள் ; வாய் ; பாலுறுப்பு மற்றும் ஆசனவாய்) இந்த புலன்கள் நுகர்வுக்கு ஆனவைகள் ஆக இருந்தாலும் ஞானத்தின் பிரகாசத்தால் அவை மெல்ல மெல்ல நுகர்ச்சி நாட்டத்தை இழந்து மட்டுப்பட்டு விடும் .அப்போது மட்டுமே உடல் ஆத்மாவிற்கு அடங்கியதாக ஆகமுடியும் . சிவன் தட்சிணாமூர்த்தியாக – முயலகனை காலில் மிதித்துக்கொண்டிருப்பது அவர் நுகர்ச்சிக்கு முயல்கிற சரீரத்தை அடக்கிய நிலைக்கு அறிகுறியாகும் .

...........................................................................................................

கீதை 14 : 12 ரஜோகுணம் அதிகரிக்கும்போது பேராசை ; அளவுக்கதிகமான கடும்பற்றுதல் ; பலன் விளைவு கருதிய தீவிர முயற்சி ; சாதுர்யம் வளர்கிறது .

கீதை 14 : 13 தமோகுணம் அதிகரிக்கும்போது இருள் ; சோம்பல் ; பைத்தியக்காரத்தனம் ; தாபம் ; மோஹமயக்கமும் வளர்கிறது .

கீதை 14 : 14 சத்வகுணத்தில் வளர்ந்துகொண்டே ஒருவன் மரணமடைந்தால் ; உத்தமர்களின் பரம்பரையில் பிறந்து ; பிறந்து தூய்மையானவர்கள் வசிக்கும் லோகங்களையும்  அடைகிறான் .

கீதை 14 : 15 ரஜோகுணம் மேலோங்கி ஒருவன் மரணமடைந்தால் பலன் விளைவில் சாதனையாளர்களின் பரம்பரையில் பிறப்பான் . தமோகுணம் மேலோங்கி மரணமடைந்தால் ஒருவன் அறியாமையில் உழல்வோரின் பரம்பரையில் பிறப்பான் .

கீதை 14 : 16 சத்வகுணத்தில் செய்யப்படும் செயல்கள் தூய்மையான புண்ணியங்களை விருத்தியாக்கும் . ரஜோகுணத்தின் செயல்பாடுகள் மனநோவில் முடியும் . தமோகுணத்தின் செயல்பாடுகளோ அறியாமை இருளில் முடியும் .

...........................................................................................................

ரஜோகுணம் சுறுசுறுப்பாக திட்டமிடல் ; முயற்சி ; பணம் சேர்த்தல் ; அதிகாரத்தை பெருக்குதல் என நீளும் போது ; சுயநலத்தால் பிறருக்கு உண்டாக்கும் தீங்குகள் ; மனநோவுகளைப்பற்றி அக்கறைப்படாது தனது திறமைகளை மெச்சிக்கொள்கிறது . ஆனால் பிறருக்கு உண்டாக்கிய நோவுகள் அவர்களின் பாவங்களையும் சேர்த்தே வாங்கிக்கொள்கிறது .

ரஜோகுணம் உள்ள நபரிடத்து துன்பம் அனுபவிப்பவராக – தப்ப முடியாமல் அல்லோகலப்படுபவராக தமோகுணம் உள்ள நபர் இருப்பார் .

பணம் சம்பாதித்தல் ; சொத்தை பெருக்குதல் ஆளுமை உள்ளவராதல் என இருப்பது ரஜோகுணம் ; உடல் சம்மந்தமான இன்ப நுகர்ச்சியில் மட்டுமே காலத்தை கழித்துக்கொண்டிருப்பது தமோகுணம் .

இந்த செயல்பாடுகளில் ஒருவரிடம் எது மேலோங்குகிறதோ அவர் ; அடுத்த இயல்புள்ளவரிடம் துன்பம் அனுபவிப்பார் . அதனால் இவரின் பாவம் – இயல்பு அடுத்தவருக்கு மாறி செல்லும் . பாவங்கள் மாறி செல்கின்றன . பிறகு இவரிடம் அவர் அல்லோகலப்படுவார் . இப்படி மாறி மாறி அல்லோகலப்பட்டே ஒரு ஆத்மா போதும் என்ற பக்குவத்திலும் ஆன்மீகத்திலும் நாட்டம் உடையவராக மாறும் .


............................................................................................................

கீதை 14 : 17 சத்வகுணம் ஞானத்தை விருத்தியாக்கும் . ரஜோகுணமோ பேராசையையும் கடும்பற்றையும் விருத்தியாக்கும் . தமோகுணமோ அறியாமையையும் மோஹமயக்கத்தையும் விருத்தியாக்கும் .

கீதை 14 : 18 சத்வகுணத்தில் வளர்கிறவர்கள் படிப்படியே மேல்உலகங்களை நோக்கி உயர்கிறார்கள் . ரஜோகுணத்தில் நிலைக்கிறவர்களோ பூமிக்குரிய வாழ்வில் மத்தியிலேயே இருக்கிறார்கள் . ஆனால் தமோகுணத்தில் நிலைக்கிறவர்களோ பூமிக்குரிய வாழ்வில் தாழ்வடைகிறார்கள் .

கீதை 14 : 19 இந்த ஜட இயற்கையின் முக்குணங்களைத்தவிர வேறெதுவும் உலகியல் செயல்பாடுகளுக்கு காரணம் இல்லை என்பதையும் ; அவைகளில் பந்தப்படாமல் பரமாத்மா அப்பாற்பட்டு நிற்பதையும் முறையாக உணர்ந்து அறிகிறவன் என்னைப்போன்ற நிலைக்கு உயர்வடைவான் . (என்னைப்போலவே நித்திய ஜீவனடைவான்)

....................................................................................................................................................

உண்மயில் ஆத்மா புசிப்பதுமில்லை ; குடிப்பதுமில்லை ; களியாட்டங்களால் அது எதனையும் நுகர்வதுமில்லை . ஆனால் சரீரத்தால் பந்தப்பட்டு சரீரத்தின் தேவைகளை – தான் அனுபவிப்பதாக மயங்கிக்கிடக்கிறது . சரீரம் ஜட இயற்கையின் முக்குணங்களால் பந்தப்பட்டு நுகர விரும்புகிறது . அது நுகர விரும்பினாலும் தனக்கு அதனால் ஒன்றும் இல்லை ; தான் அப்பாற்ப்பட்டவன் என்பதை ஆத்மா விளிப்படைந்து விடுவித்துக்கொள்ளுமானால் ; பராமாத்மா அப்படிப்பட்ட நிலையில்தான் உள்ளார் என்பதையும் தெளியுமானால் அவரைப்போலவே ஆகும் வழி திறக்கும் .

............................................................................................................

கீதை 14 : 2௦ உடலில் உறையும் ஆத்மா ; இந்த முக்குணங்களை கடந்து உடலை அடக்கி வசப்படுத்துமனால் பிறப்பு ; இறப்பு ; முதுமை மற்றும் துன்பங்களிலிருந்து விடுபட்டு அமிர்த்தத்தை சுவைபான் .

விடுதலை பெற்றவன் எவன் ?

கீதை 14 : 21 அர்ச்சுணன் கேட்கிறான் : இம்மூன்று குணங்களிலிருந்து அவன் எவ்வாறு தன்னை விடுவித்து உய்வடைகிறான் ? அவனது நடத்தைகள் எவ்வாறு இருக்கும் ? அவனின் அறிகுறிகள் எப்படி இருக்கும் ?

கீதை 14 : 22 யுகபுருஷன் கிரிஷ்ணர் கூறினார் : பிரகாசம் (புகழ்) ; அல்லது வெற்றி (அதிர்ஷ்டம்) ; அல்லது மயக்கம் (துரதிர்ஸ்டம்) வளரும்போது அதை வளர்க்காதவனும் ; அல்லது வெறுத்து தடுக்காதவனும்

கீதை 14 : 23 விருப்பு வெறுப்புகளில் உணர்ச்சி வசப்படாமல் நிதானமுள்ளவனும் ; ஜட இயற்கையின் முக்குணங்களே இவ்வாறு செயல்படுகின்றன என்ற  தெளிவால் நடுநிலையோடு அவற்றை உதாசீனப்படுத்தியும் ;

கீதை 14 : 24 மாறிமாறி வரும் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவித்து தன்னில்தானே நிறைவுபெற்றும் (ஆத்மசொரூபியாக) மண்ணையும் நவமேதககற்களையும் பொன்னையும் சமமாக பாவிப்பவனும் ; பிரியமானவற்றிலும் பிரியமற்றவைகளிலும் சமநிலை உடையவனும் ; புகழையும் இகழ்ச்சியையும் சமமாக பாவித்தும் ;  ஆத்மாவில் ஏற்படும் சுய புகழ்ச்சியை கடந்தும் (தற்பொழிவற்றும் -ஆத்மாவில் தன்னை அறியாமல் ஏற்படும் திருப்தி அல்லது பெருமையையும் கவனமாக களையவேண்டுமென்பது இங்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது)

கீதை 14 : 25 மான அவமானங்களை சமமாக பாவித்தும் நண்பனையும் எதிரியையும் சமமாகவே பாவித்தும் குழுஅபிமான பேதங்கள் - பிரிவினைகளை துறந்தும் இருப்பவனே ஜட இயற்கையின் முக்குணங்களை கடந்தவனாக அறியப்படுவான் .

....................................................................................................................................
ஆதியாகமம்  11

1.      பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.
6. அப்பொழுது கடவுள் : இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.

7.
 ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.

ஜனத்திரள் பெருத்தபோது ஐக்கியம் என்னும் மனித பலத்தால் எதையும் பூமியில் சாதிப்போம் என மனிதர்கள் சுயத்தில் பெருத்தபோதே குழு பேதங்கள் ஒரு சாபமாக கடவுளிடமிருந்து ஆதியில் வந்திருக்கிறது . இதன் விளைவாகவே சாதி ; இன ; மொழி ; மத பேதங்கள் வளர்ந்து பெருகி சண்டை சச்சரவுகளில் முடிகிறார்கள் . கலியுகம் முடிவை நெருங்குவதாலேயே சமரச வேதத்தை கடவுள் வெளியாக்க சித்தம் கொண்டுள்ளார் . இருப்பினும் பரத்திற்குரிய நித்திய ஜீவனை அடைய தகுதி பெற்றோரிடம் இந்த குழு பேதம் மறைந்து விடுகிறது . சாதாரண அல்லது போதிய அளவு ஆன்மவியலில் முன்னேற்றம் இல்லாத பக்திமான்களிடம் மத பேதம் இருக்கவே செய்யும் . அதை கடவுளால் மட்டுமே சீர்திருத்தவும் முடியும் .

.....................................................................................................................
கீதை 14 : 26 & 27 மேலும் எவனொருவன் மரணமற்றதும் ; அழிவற்றதும் ; நித்தியமானதும் பேரின்பமும் தர்மமும் கிருபையுமான அருவ கடவுளின் பெளதீக வெளிப்பாடு நானே (நாராயணனே) என்பதை அறிந்து என்னிடம் பூரண சரணாகதி அடைந்து குருகுலத்தில் சேவை செய்கிறானோ அவன் ஜட இயற்கையின் முக்குணங்களை கடந்து நித்திய ஜீவனுக்கு உயர்த்தப்படுவான் .


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி