Wednesday, July 18, 2012

யோகம் 12 பக்தி யோகம் !!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்) 








கீதை 12 : 1 அர்ச்சுணன் கேட்டான் : புலன்களுக்கு அப்பாற்பட்ட கண்ணால்
காண இயலாத கடவுளை வழிபடுபவர்கள் ; இதோடு கூட உம்மை சற்குருவாக பின்பற்றி முறையாக கடவுளை வழிபடுபவர்கள் இவர்களில் யார் விரைவில் பக்குவமடைவார்கள் ?

கீதை 12 : 2 அவதூதர் கிரிஸ்ணர் கூறினார் : என் மீது பற்று கொண்டு மனதை எப்போதும் என்னிடம் ஈடுபடுத்தி என் மூலமாக கடவுளை நம்பிக்கையுடன் யார் வழிபடுகிறார்களோ ; அவர்களுக்கு பரலோக வாழ்வுக்கான திவ்யமான விஷயங்கள் என்னால் அளிக்கப்பட்டு பக்குவமடைகிறார்கள்

கீதை 12 : 3 & 4 : ஆனால் தோற்றமில்லாததும் , புலன்களுக்கு அப்பாற்பட்டதும் எங்கும் விரவி நிற்பதும் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டதும் மேலும் மாற்றமில்லாததும் அசைவுகள் அற்றதும் பூரணமானதும் ஆன கடவுளின் அருவத்தன்மையில் புலன்களை கட்டுப்படுத்தி நிலைப்படுத்துகிற யோகிகள் மன சமநிலை அடைய தனக்குள் போராடி எங்கும் எதிலும் சமநோக்கு உண்டாகவும் சகல உயிர்களுக்கும் நன்மை பயக்கும் கர்மங்களை செய்யவும் பெரும் பிரயத்தனம் செய்தும் இயலாமல் பலகீனத்தை உணர்ந்து தாழ்மையடைந்து இறுதியில் என் குருத்துவத்தை சரணடைவார்கள் !

கீதை 12 : 5 ஏனெனில் உடலை அடக்கும் அப்பியாசத்தால் கடவுளின் அரூபத்தில் மனதை நிலைபடுத்துவது , பக்குவம் எய்துவது – முன்னேற்றம் காண்பது மிகமிக கடினம் ! உடலை உடையோருக்கு அவ்வழி சிரமம் !

கீதை 12 : 6 & 7 ஆனால் எவர் என்னை ஏற்றுக்கொண்டு ( குருபக்தி ) எல்லா செயல்களையும் கடவுளுக்காக அர்ப்பணித்து எனது குருத்துவத்தில் பிறழாது பக்தி தொண்டாற்றுகிறார்களோ ; என்னை பின்பற்றுகிறார்களோ அவர்களை பிறப்பு இறப்பு என்னும் சாகரத்திலும் ஜடஉலகின் பந்தத்தால் நீளும் பிறவிகளிலும் உழலாமல் விரைவில் விடுவிகிறவன் ஆகிறேன் !!

கீதை 12 : 8 என் மீது மனதை பற்றவைத்து என் உபதேசங்களுக்கு உன் புத்தியை கீழ்ப்படுத்துவாயானால் என்னில் நிச்சயமாக நீ வாழ்வாய் என்பதில் சந்தேகமில்லை !!

கீதை 12 : 9 செல்வத்தை சம்பாதிக்கும் ஆற்றலுள்ளோனே ! உன் மனதை என்னிலே சமப்படுத்து ! முடியாவிட்டாலும் பக்தி யோகத்தின் நெறிகளை விடாது பின்பற்றுவாயாக ! அது என்னிலே நீ நிலைபெறுவதற்கான பயிற்சியை உண்டாக்கி என்னைப்போலாகும் ஆசையை பூர்த்தி செய்யும் !!

கீதை 12 : 10 பக்தி யோகத்தின் நெறிகளை பயிற்சி செய்ய இயலாவிடின் எனது குருத்துவத்தின் ஏவுதல்களை செயலாக்க முயல்வாயாக ! அவ்வாறு உனது கர்மங்கள் கடவுளுக்கு அர்ப்பணமாக நீ செய்வதால் விரைவில் பக்குவ நிலையை வந்தடைவாய் !

கீதை 12 : 11 இருப்பினும் இதைக்கூட செய்ய உன்னால் முடியாவிட்டாலும் ; குருவாகிய என்னிடம் அடைக்கலம் பூண்டு பக்தித்தொண்டாக எல்லா செயல்களின் பலன்களையும் தியாகம் செய்து விடுவாயாக ! இருக்கிறோம் என்ற இருப்பைத்தவிர உனது எல்லா செயல்களின் விளைவுகளையும்
கடவுளுக்கே அர்ப்பணித்து விடுவதால் ஆத்மாவிலே நிலை பெற முடியும் !

கீதை 12 : 12 நிச்சயமாக ஞானமே சிறந்தது ! ஞானத்துடன் தியானத்தையும் அப்பியாசிப்பாயாக ! முக்கியமாக உனது கர்மங்களின் விளைவுகளை கடவுளுக்கே அர்ப்பணித்து விடுவாயாக ! அர்ப்பணிப்பே மன சாந்தியை அருளும் !

கீதை 12 : 13 எல்லா உயிர்களிடத்தும் அன்புடனும் ; போட்டி பொறாமையற்ற நட்புடனும் ; நான் என்ற அலட்டல் அற்றும் ; முதிர்ந்த மனதால் சகலரின் தீயகுணங்களையும் சகித்தும் ; இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவித்தும் :

கீதை 12 : 14 எப்போதும் திருப்தியுடன் தன்னில் தானே லயித்திருப்பவனே ஆத்மா ஞானியாவான் ! மனதாலும் புத்தியாலும் குருவாகிய என்னையே பற்றியவனாய் கடவுளுக்கு பக்தி தொண்டில் யாரொருவன் உறுதியாய் நிலைத்துள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 15 உலக மக்கள் யாருக்கும் நெருக்கடி உண்டாக்காமலும் ; உலக மக்கள் யாராலும் யாரிடமிருந்தும் சஞ்சலம் அடையாமலும் ; இன்பம் துன்பம் பயம் மற்றும் ஏக்கம் கடந்தும் சம நிலையோடு யாரொருவன் உள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 16 எல்லா செயல்பாடுகளிலும் கவலையிலிருந்து விடுபட்டும் ; துன்பங்கள் அனைத்தையும் உதாசீனப்படுத்தியும் ; உளத்துய்மையோடும் ; முரண்பாடுகள் அனைத்திலும் நடுநிலைமை – சமரசத்தில் நிபுணத்துவமும் உள்ளவன் எவனோ அத்தகு பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன் !!

கீதை 12 : 17 அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதில்லை ; துக்கத்தில் ஆழ்ந்து முடங்கிப்போவதில்லை ! கடந்ததை நினைத்து புலம்புவதுமில்லை ;
வரவேண்டியதை எதிர்பார்த்து தவிப்பதுமில்லை ! மங்களம் அமங்களம் இரண்டையும் கடந்தவன் எவனோ அத்தகு பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன் !!

கீதை 12 : 18 & 19 நண்பர்களையும் எதிரிகளையும் சமமாக பாவிப்பவனும் ; புகழ்ச்சி இகழ்ச்சி ; மான அவமானம் ; இன்பம் துன்பம் ; தீ மற்றும் பணி ஆகிய இருமைகளை கடந்து சமமாக பாவிப்பவனும் ; களங்கங்களை கொண்டுவரும் சகல அசுரமாயைகளிளிருந்தும் விடுபடத்தெரிந்தும் ; இருப்பதில் திருப்தியுற்றும் ; இருப்பிடத்திற்கும் கூட கவலையற்றும் ; மெய்ஞானத்தில் நிலைத்து பக்தி தொண்டில் யாரொருவன் உறுதியாய் நிலைத்துள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 20 பக்தி யோகம் என்ற இந்த அமிர்தத்தை நம்பிக்கையோடு ஏற்று உபதேசிக்கப்பட்டபடி பரமாத்மாவான என்னை சற்குருவாக ஏற்று முழுமையாக பின்பற்றுபவர்கள் எவர்களோ அவர்களே எனக்கு மிக மிக பிரியமானவர்கள் !!